சென்னை: ரூ 162 கோடி செலவில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரனை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய 26 இணையதளங்கள் முடக்கப்பட்டதாக திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் எந்திரன் திருட்டு டிவிடி விற்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “எந்திரன் திருட்டு டிவிடி விற்பனை மற்றும் சட்ட விரோதமாக இணையதளங்களில் ஒளிபரப்பியது குறித்து தொடர்ந்து எங்களுக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.
உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், திருட்டுத்தனமாக எந்திரனை ஒளிபரப்பிய 26 இணையதளங்களை முடக்கியுள்ளனர். அதன் உரிமையாளர்களைக் கைது செய்யும் முயற்சியும் நடக்கிறது.
சென்னை, திருத்தணி, திருச்சி, திருநெல்வேலி உள்பட திருட்டு டிவிடி விற்ற 50 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்…” என்று கூறப்பட்டுள்ளது.
எந்திரன் திருட்டு டிவிடி விற்பனை மற்றும் ஒளிபரப்பும் இணைய தளங்கள் பற்றி தெரிய வந்தால் உடனடியாக சென்னை சைபர் கிரைம் மற்றும் திருட்டு டிவிடி ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
எந்திரன் படத்தை இணையதளங்கள் மட்டுமல்லாது, தனிநபர் வலைப்பூக்கள் சிலவற்றிலும் ஒளிபரப்பப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாம். அவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment