மணிரத்னம் இந்தி, தமிழ், தெலுங்கில் இயக்கிய ராவணன்-ராவண் படம் இரு வேறான வசூலைக் கொடுத்து வருகிறதாம். முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் (தமிழ், இந்தி, தெலுங்கு [^] ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து) ரூ.53 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வட அமெரிக்கா [^]வில் ராவண் திரையிடப்பட்ட திரையரங்குகளில் திருப்திகரமான அளவு கூட்டம் இல்லாததால், வசூலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் கனடாவிலும் முதல் மூன்று நாட்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலாகியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் படம் குறித்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் வெளியாகியும், தியேட்டர்களில் பாதியளவு கூட நிரம்பாததால் இந்த வாரத்துடன் படத்தைத் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்தின் குரு படம் வெளியானபோது, வட அமெரிக்காவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 1 மில்லியன் டாலருக்கு மேல் வசூலானது. ஆனால், அதில் பாதியளவுக்குக் கூட ராவண் வசூலிக்கவில்லை.
இதே நிலை நீடித்தால் இரண்டாவது வாரம் இந்தப் படம் தூக்கப்பட்டு விடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி ரசிகர்களில் பலர், இந்தப் படம் 'நவீன ராமாயணமாக' இருக்கும் என நினைத்தே வந்ததாகவும், ஆனால் சொதப்பலான க்ளைமாக்ஸ் மற்றும் விக்ரமின் பாத்திரப் படைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
வசூல் எவ்வளவு?:
முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் தமிழ் ராவணன் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு உலகமெங்கும் ரூ.4 கோடியை ஈட்டியுள்ளது. ராவண் இந்திப் பதிப்பு ரூ.38 கோடியை வசூலித்துள்ளது.
இந்திப் படமான ராவணுக்கு வட இந்தியாவில் வரவேற்பில்லை. துவக்க நாளில் 40 சதவீத பார்வையாளர்களே வந்ததாகவும், பல மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் காலியாக இருந்ததாகவும் பாலிவுட் [^] விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.
அவெர்ஸ் ஃபன் சினிமா மல்டிப்ளெக்ஸின் சிஇஓ விஷால் கபூர் கூறுகையில், "எங்கள் திரையரங்குக்கு 25 சதவீத பார்வையாளர்கள்தான் வந்தார்கள். இப்போது இன்னும் மோசம்..." என்றார்.
தமிழகத்தில் ராவணனுக்கு ஓரளவு நல்ல துவக்கம் இருந்தது. ஆனால் படம் குறித்த செய்தி பரவியதும் திங்களன்றே பல திரையரங்குகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளனவாம்.
தெலுங்கில் நிலைமை படுமோசம் என ரிலையன்ஸே ஒப்புக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment